எமது அண்மைய பொருளாதார நெருக்கடி ஏன் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு மோசமானது என்றும், கடன்களை மீளச்செலுத்தும் இயலுமையை நாம் இழந்ததை அறிவிக்கும் நிலைக்கு நாம் எவ்வாறு இட்டுச்செல்லப்பட்டோம் என்றும், இவற்றுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் என்ன தொடர்பு என்றும் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்கவுள்ளோம்.

April 16, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

rajapakseIMF default.jpeg

செய்தியும் ஆய்வும் உமேஷ் மொரமுதலி  செம்மையாக்கம் ஆயிஷா நாஸிம்  மொழிபெயர்ப்பு செல்வராஜா கேசவன்

“வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தும் இயலுமையை நாங்கள் இழந்துவிட்டோம். கடன் கொடுப்பனவுகளை செலுத்துவது சவாலானதாகவும் சாத்தியமில்லாததாகவும் ஆகிவிட்டது.” - மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

ஏப்ரல் 12, சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு இரண்டு நாட்கள் முன்பு, இலங்கை அரசு வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை நிறுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கடன்களை மறுசீரமைக்க போவதாக அறிவித்தது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட திறைசேரி செயலாளர் கே.எம்.எம் சிறிவர்தன ஆகியோர் இதை, சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுடனான ‘கடன் செலுத்தும் இயலுமையை உறுதி செய்யும் கடன் மறுசீரமைப்பு முற்காப்பு  நடவடிக்கை பேரம்’ என குறிப்பிட்டனர். எளிய மொழியில் சொல்வதானால், இலங்கை தனது வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை தற்போதைக்கு நிறுத்தி விட்டது, கொடுப்பனவுகளை முழுமையாக வழங்க அதற்கு மேலும் கால அவகாசம் தேவை.

சுதந்திரத்திற்கு பின் இலங்கை கடன்களை மீளச்செலுத்த முடியாமல் போன முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எமது நாடு இவ்வாறான ஒரு இடியப்பச்சிக்கலில் சிக்கியதேயில்லை, இச்சிக்கலிலிருந்து வெளிவருவதும் ஒன்றும் இலகுவானதில்லை.

எமக்கு இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது? சர்வதேச நாணய நிதியத்தை விட்டால் நமக்கு வேறு வழிகளே கிடையாதா?

எமது முன்னைய ஆய்வுக்கட்டுரைகளில், எமது பொருளாதார கட்டமைப்பின் பலவீனங்களையும், எமது வெளிநாட்டுக்கடன்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டிருந்தோம். பல பொருளாதர நிபுணர்கள், கடன்களை மீளச்செலுத்தும் இயலுமையை இலங்கை இழக்கும் என்பதையும், கடன்கள் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரல் ஆகியன விரைவிலேயே நடக்கும் என்பதையும், நாடு இன்னும் பல ஆண்டுகளுக்கு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும், முற்கூட்டியே கணித்திருந்தனர்.

வெளிநாட்டுக்கடன்கள் யாவும் வெளிநாட்டு நாணயங்களிலேயே (பொதுவாக அமெரிக்க டொலர்களில்) மீளச்செலுத்தப்பட வேண்டும் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இவற்றை மீளச்செலுத்தும் எமது இயலுமை வெளிநாட்டு நாணயங்களை ஈட்டிக்கொள்ளும் எமது இயலுமையிலேயே பெருமளவில் தங்கியுள்ளது. குறைவான ஏற்றுமதிகள் காரணமாக இவ் இயலுமையில் எமக்கு குறைபாடே காணப்படுகிறது. எந்தளவுக்கு எமது வெளிநாட்டு நாணய ஈட்டம் குறைகிறதோ அந்தளவுக்கு வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்துவதும் கடினமானதாகும்.

இலங்கை தற்போது பெருமளவான வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை நிறுத்திவிட்டதன் காரணமாக, எமது வெளிநாட்டு நாணயக்கையிருப்பை எமக்குத்தேவையான அடிப்படை பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாத்திரம் பயன்படுத்த முடியும். வெளிநாட்டு நாணயக்கையிருப்பு மிகவும் குறைவாக உள்ள சமயத்தில் வெளிநாட்டுக்கடன் கொடுப்பனவுகளையும் செலுத்திக்கொண்டு அடிப்படை பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றோமானால், இறக்குமதிக்கு பணமே மிஞ்சாது. இதனால், நாடுகள் எமது இறக்குமதிகளை நிறுத்தி விடவும் கூடும்.

ஏன் இந்நெருக்கடி வரலாறு காணாதது?

இப்பொருளாதார நெருக்கடி ஒரு சில காரணங்கள் காரணமாக வரலாறு காணாததாக காணப்படுகிறது.

எமது நாடு கடன் செலுத்தும் இயலுமையை இழக்கும் என்பது, நாட்டின் நட்சத்திரத்தினை பார்த்தபோது தனக்கு தெரியவில்லை என ஜனாதிபதியின் சோதிடர் ஞானாக்கா கூறியுள்ளார். பட மூலம்: News Curry.

எமது நாடு கடன் செலுத்தும் இயலுமையை இழக்கும் என்பது, நாட்டின் நட்சத்திரத்தினை பார்த்தபோது தனக்கு தெரியவில்லை என ஜனாதிபதியின் சோதிடர் ஞானாக்கா கூறியுள்ளார். பட மூலம்: News Curry.

முதலாவது காரணம், இலங்கையினது கடன் மதிப்பீடுகள் தொடர்ச்சியாக குறைந்து வந்ததனால், ஏப்ரல் 2019 இன் பின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களினை (ISBs) வழங்கி சர்வதேச மூலதன சந்தைகளிலிருந்து கடன்களினை பெற அதனால் முடியாமல் போனது. இதனால், 2020-2022 இல் முதிர்வடைந்த சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்குரிய தொகையை மீளச்செலுத்துவது கடினமாகியது. 2019 இல் புதிதாக பதவியேற்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் காரணமாக ஏற்பட்ட இலங்கையின் கடன் மதிப்பீடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியைத்தொடர்ந்து, புதிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களினை வழங்குவது கடினமாகியது. இக்கடன் மதிப்பீட்டு வீழ்ச்சியினைத் தொடர்ந்து பெருந்தொற்றினால் ஏற்பட்ட பருப்பொருளியல் எதிர்விளைவுகள் காரணமாக மேலும் தொடர்ச்சியான வீழ்ச்சிகள் உண்டாகி சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்குவதை சாத்தியமற்றதாக்கியது. இது இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கடன் (முக்கியமாக இலங்கைக்கு அதிகம் தேவைப்படும் அமெரிக்க டொலர்கள்) பெறும் இயலுமையை குன்றச்செய்தது.

<aside> 👉🏽 சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் என்பவை, கடனாக வழங்கப்படும் பணம் குறித்த திட்டத்தில்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எதுவித கட்டுப்பாடுகளுமில்லாத வணிக கடன்களாகும். இதனால், அரசு பணத்தினை தான் எவ்வாறு செலவழிக்க எண்ணுகிறதோ அவ்வாறு செலவழிக்கும் சுதந்திரம் அதற்கு உண்டு. அரசு கோரிய தொகை முழுமையும் ஒரே தவணையில் அதற்கு கடனாக வழங்கப்படும். திட்ட கடன்களை விடவும் இவை விலை கூடியவையுமாகும்.

</aside>

ஏன் இந்த கடன் மதிப்பீடுகள் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன?

<aside> 👉🏽 ஒரு நாட்டின் கடன் மதிப்பீடுகளே அந்த நாடு தான் பெற்ற கடனை திருப்பியளிக்கும் இயலுமையை கொண்டதா இல்லையா என்பதை காட்டும் குறிகாட்டிகளாகும். எனவே இம்மதிப்பீட்டில் ஏற்படும் வீழ்ச்சி நேரடியாக, அந்த நாட்டின் பெற்ற கடன்களை திருப்பியளிக்கும் இயலுமையில் ஏற்பட்ட வீழ்ச்சியை குறிக்கும். எந்தளவுக்கு கடன் மதிப்பீடுகள் குறைகின்றனவோ, அந்தளவுக்கு கடனை திருப்பி செலுத்தும் இயலுமையும் குறைவடையும்.

</aside>

இலங்கையை பொறுத்தவரையில், 2019 இல் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்தும், அதனால் இலங்கையின் வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்தும் இயலுமை வீழ்ச்சியடையும் என இம்மதிப்பீடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் எச்சரித்திருந்தன. 2020 அளவில், இலங்கை ஏற்கனவே பாரிய பாதீட்டு பற்றாக்குறையை (அரசின் வருமானத்தை விடவும் செலவு அதிகம்) கொண்டிருந்தது, அது போதாதென்று மென்மேலும் வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு, அதனால் வரிவருவாய் இழப்பு மேலும் அதிகரித்து முன்னிலும் அதிகமான பாதீட்டு பற்றாக்குறை ஏற்பட்டது. இது எதுவித கணிசமான வருமான அதிகரிப்பும் இல்லாத சூழ்நிலையிலும் மென்மேலும் கடன்களை வாங்கி குவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு அரசினை தள்ளியது.

இது கடன் மதிப்பீட்டினை வீழ்ச்சிக்குட்படுத்திய மிக பாரியதொரு பருப்பொருளியல் சிக்கலாகும்.