June 1, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

1.jpg

ஆய்வு : உமேஷ் மொரமுதலி

செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம்


நீங்கள் கேட்டது:

இலங்கை கடனை திருப்பிச் செலுத்த தவறுவது முதன் முறையா?


எங்கள் பதில் :

ஆம். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற பலதரப்பு நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்துவதைத் தவிர, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை அரசாங்கம் 12 ஏப்ரல் 2022 அன்று நிறுத்தியது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முதலாவது கடன் இடைநிறுத்தம் இதுவாகும். இது பொதுவாக நாட்டின் முதலாவது ‘படுகடனை செலுத்தத் தவறுதல்’ (sovereign default) எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் கடனை செலுத்தத் தவறுதல் (Default) , கடந்த ஓரிரு வாரங்களில் மீண்டும் உலகளாவிய மற்றும் உள்ளூர் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகியது. ஏனெனில் இலங்கை அதன் காலக்கெடுவுக்குள் பன்னாட்டு முறிகளுக்கு (ISB) (கூப்பன் கொடுப்பனவு என்றும் குறிப்பிடப்படும்) வட்டியைச் செலுத்தத் தவறியதனாலாகும். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் மே 18 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. ஒரு நிலையான நடைமுறையாக, கூப்பன் கொடுப்பனவைச் செலுத்துவதில் இலங்கையின் தோல்வியை பிரதிபலிக்கும் வகையில், பிட்ச் தரப்படுத்தல் இலங்கையை ‘கட்டுப்படுத்தப்பட்ட தவணை தவறும் நிலை’க்கு {Restrictive Default (RD)} தரமிறக்கியது.

இந்த நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக, சில ஊடகங்கள் மே மாதத்தில் இலங்கை அதன் வரலாற்றில் முதல் தடவையாக தவணை தவறியதாக அறிக்கையிட்டன. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது ‘கடனை செலுத்தத் தவறும் நிலை’யை அறிவித்தது. எனினும், படுகடனை செலுத்தத் தவறும் நிலையை இலங்கை ஏற்கனவே அறிவித்திருந்ததால் ISB கூப்பன் கொடுப்பனவைச் செலுத்த முடியாதுபோனமை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

சில ஊடகங்கள் இதை மே 18 அன்று ‘இலங்கை கடனை செலுத்தத் தவறும் கடினமான நிலைக்கு’ (hard default) தள்ளப்பட்டதாக விளக்கமளித்தன. ‘கடனை செலுத்தத் தவறும் கடினமான நிலை’ என்ற வார்த்தைக்கு கடனாளி கடன் வழங்குனர்களுடன் நன்னம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுக்கும் நிலை என பொருளியல் விளக்கமளிக்கிறது.

இலங்கை, கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்குமான தனது நோக்கத்தை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஆரம்ப கட்டங்களில் ஒன்றான கடன் மறுசீரமைப்பிற்கான நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களையும் இலங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

எனவே, இலங்கையின் கடனை செலுத்தத் தவறும் நிலையை ‘கடனை செலுத்தத் தவறும் கடினமான நிலை’ என வகைப்படுத்த முடியாது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகள் எவை?


எங்கள் பதில் :

எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமை இலங்கை அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசியலமைப்பு ஒரு தெளிவான குறிப்பை முன்வைக்கவில்லை என்றாலும், அரசியலமைப்பின் 14 ஆவது உறுப்புரை எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமைக்கான அடிப்படையை உருவாக்குகிறது. அரசியலமைப்பின் உறுப்புரை 14 (அ), (ஆ), மற்றும் (இ) இன் படி, ஒவ்வொரு பிரஜையும் (அ) வெளியிடுதல் உட்பட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அனுபவிக்க உரிமை உள்ளது (ஆ) அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம்; மற்றும் (இ) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.