ஏன் நாம் இவ்வளவு மின்துண்டிப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம்? இது தொடர்பில் எவராலும் எதுவுமே செய்ய முடியாதிருப்பதாக தோன்றுவது ஏன்? மின் உற்பத்தி நிலையங்கள் முதல், அவற்றின் உற்பத்திகள் மற்றும் மின்சாரத்தை வழங்குவதற்கான எரிபொருள் தீர்ந்து போனது வரை இந்த நாட்டின் மின் உற்பத்தியின் ஒவ்வொரு கோணத்தையும் இங்கு நாம் அலசி ஆராய்ந்துள்ளோம்.


January 23, 2022

Read this article in English | සිංහල


கதை மற்றும் பகுப்பாய்வு : யுதன்ஜெய விஜேரத்ன செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : மொஹமட் பைரூஸ் &  நாதிம் மஜீத்

அண்மைக்கால நிகழ்வுகள் பற்றிய ஒரு குறிப்பு

துரதிர்ஸ்டவசமாக, அண்மைக்காலத்தில் இருந்து மின்சாரம் தொடர்பான சில பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம்

கடந்த ஜனவரி 10 ஆம் திகதி, இலங்கை மின்சார சபை சிக்கல் மிக்க சுமை குறைப்பு கால அட்டவணைக்கு ஏற்ப ஒரு கால அட்டவணைப் பிரகாரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதை உறுதி செய்தது.

இதற்கு முன்வைக்கப்பட்ட காரணங்கள் அவை வெளியிடப்பட்ட மூலங்களுக்கு ஏற்ப வேறுபட்டதாக அமைகின்றது – களணிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ள 163 மெகாவாட்ஸ் மின்சாரத்தை அனல் மின் வலு வடிவில் உற்பத்தி செய்யும் தனியார் மின் பிறப்பாக்கும் நிலையமான சோஜிட்ஸ் மின்னிலையம் பழுதடைந்துள்ளமை இதற்குரிய காரணமாக பத்திரிகைகளால் முன்வைக்கப்பட்டது. எனினும் எமது சொந்த உண்மை சரிபார்க்கும் செயற்பாடு மூலமாக சில பரந்த பிரச்சினைகளை அறிய முடிந்தது.  இலங்கை மின்சார சபை 800 மெகாவாட்ஸ் அளவான பாரிய மின்னுற்பத்தியை இழந்த நிலையில் உள்ளது. களணிதிஸ்ஸ, குகுளு கங்கை மற்றும் கெரவலபிட்டிய (சர்ச்சைக்குரிய யுகதனவி மின் உற்பத்தி வசதி உள்ளடங்கலாக) ஆகிய மூன்று மின்னுற்பத்தி நிலையங்களும் வேறுபட்ட காலப்பகுதிகளில் செயலிழந்த நிலையை அடைந்தன. அதே நேரம், சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பார்ஜ் மின்னுற்பத்தி நிலையங்கள் எரிபொருட் தட்டுப்பாட்டினால் செயற்பட முடியாத நிலையில் உள்ளன.

அத்துடன் இதைவிட தீவிரமான பிரச்சினை எம்முன்னே உள்ளது: தற்பொழுது காணப்படும் மின்னுற்பத்தி கட்டமைப்புகளை இயக்குவதற்கு கூட எரிபொருள் கிடைக்குமா என்பதை அறியாத நிலையில் இலங்கை மின்சார சபை உள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டியுள்ள கடன் தொகையான 91 பில்லியன் ரூபாய்களில் 18 பில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளதை உறுதி செய்யும் இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் மின் அத்தியட்சகர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் A.G.U நிஷாந்த இலங்கை மின்சார சபை தற்போது எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் காணப்படுவது எதிர்காலத்தில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் மின்தடைக்கு வழிவகுக்கும் என எதிர்வு கூறுகின்றார்.

எனினும், அதற்கு அடுத்த நாள் அரசாங்கத்தின் அவசர கூட்டம் ஒன்றைக் கூட்டிய ஜனாதிபதி தடைப்படாத மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக உறுதியளித்துள்ளார். இலங்கை மின்சார சபை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய கடனில் 18 பில்லியன் ரூபாய்களை மீளச் செலுத்தவுள்ளது, இலங்கை மத்திய வங்கி நிலக்கரி இறக்குமதிக்காக அந்நியச் செலாவணியை மின்சார சபைக்கு வழங்கவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அனைத்தும் வழமைக்கு திரும்பும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சிறிது எரிபொருளை மின்சார சபைக்கு வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுவதுடன் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது, மேலும் சுமைக்குறைப்புக்காக மின்சாரம் தடைப்பட மாட்டாது எனவும் பதட்டமடைய வேண்டாம் எனவும் பொதுமக்கள் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் அரசியல் கட்டமைப்பு ஆகிய இரு தரப்பினரும் வாக்குறுதிகளை அளித்த போதும் நிச்சயமாக மின்சாரத் துண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனவரி 14 ஆம் திகதி கடந்த ஏழு நாட்களுக்குள் மின்தடையை எதிர்கொண்டமை தொடர்பான தகவல் சேகரிப்பு ஒன்றை நாம் மேற்கொண்டோம்.

அத்துடன் இது ஒரு வெறும் அரசியல் பிரசாரம்தானா என்பதும் இதன் மூலம் சரிபார்க்கப்பட்டது. இன்று வரை மின் துண்டிப்புகளின் அளவு ஒரு நாளைக்கு 10 முதல் 13 மணித்தியாலங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்துள்ளதால் நாம், மின்சார வசதியுடன் பணியாற்றக்கூடிய இடங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். ஏ.ஜி.யு. நிஷாந்தவின் வார்த்தைகள் இப்போது தீர்க்கதரிசனமாகியுள்ளன.

ஆக, நாம் ஏன் இந்த நெருக்கடியைச் சந்தித்துள்ளோம்?

நாம் எமது மின்சாரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றோம்?

நமக்கு என்ன தெரியும் என்பதில் இருந்து ஆரம்பிப்போம். இலங்கையில் மின்சார உற்பத்தியின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக நாம் மூன்று மூலங்களை ஆராய்ந்தோம், அவையாவன: இலங்கை மின்சார சபையின் 2019 ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கை, அது கடந்த காலத்தின் விபரங்களை வழங்குகின்றது; இலங்கை மின்சார சபையின் உற்பத்தி திட்டமிடல் அலகின் 2022 – 2024 வருடங்களுக்கான நீண்ட கால மின்னுற்பத்தி விரிவாக்கல் திட்டம், அது எதிர்கால திட்ட விபரங்களை வழங்குவதுடன் கடந்த கால போக்குகளையும் மீட்டிப் பார்க்கின்றது; அத்துடன் உலகளாவிய சக்திக் கண்காணிப்பு (Global Energy Monitor)> அது மின்னுற்பத்தி நிலையங்கள் பற்றிய தரவுத்தளம் ஒன்றாகும்.

நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் உற்பத்தி பற்றிய விபரங்களை வழங்கும் வரைபடம் பின்வருமாறு.

https://lh6.googleusercontent.com/-Hhkzf53z0u4HnyBM101GEIWzpGq4Q9aXKxqcXsxz_IFUt1QXK2yraQHgByrQLpp-REF7UVoxAxA-csRSSB88_ZRSSY_xb7MRIawTXr-BbUDRWzjn5QQsh2iIRbJcAyfAQM3Q1Hv