தகுதி, வினைத்திறன் என எதுவுமற்ற பணிச்சுமை மிகுந்த இலங்கையின் போக்குவரத்து முறைமைகள் தொடர்பானதோர் அலசல்.

Too Slow Too Furious.png

Watchdog Sri Lanka வழங்கும் ஆய்வுக்கட்டுரை. வெளியிடப்பட்ட திகதி: December 1, 2022.

உள்ளடக்கம்

I: நாம் ஏன் இது தொடர்பில் அக்கறைப்பட வேண்டும்?

இலங்கையின் குடிமக்கள் அனைவருமே போக்குவரத்தில் பல்வேறு இடர்களை எதிர்கொண்டு வருகிறோம். நிரம்பி வழியும் பேருந்துகள், பிந்தி வரும் தொடருந்துகள், வாகன நெரிசல்கள் மிகுந்த சாலைகள், உயிராபத்தை உண்டாக்கும் விபத்துகள், இவை யாவும் நாட்டு மக்கள் அனைவரும் அன்றாடம் எதிர்கொள்பவைதான். இன, மத, வயது,  அரசியல் வேறுபாடுகள் மிகுந்த இந்த சமூகத்தில் போக்குவரத்து தொடர்பில் குறை கூறுவதில் மாத்திரம் நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம்.

இந்த ஆய்வுக்கட்டுரையில், இலங்கையில் போக்குவரத்து எவ்வாறு தொழிற்படுகிறது, அதற்கு ஆகும் செலவுகள், யாருக்கெல்லாம் அது பயன்படுகிறது, எங்கெங்கெல்லாம் அது மேம்படுத்தப்படலாம் ஆகியவை தொடர்பில் ஆராயவுள்ளோம். நாம் அடிப்படையிலிருந்து மேல்நோக்கி செல்வுள்ளதனால் அனைத்து தரவுகளையும் விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கும். நாங்கள் இதற்காக பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டதோடு பல்வேறுபட்ட துறைசார் நிபுணர்களோடும் கலந்துரையாடி ஒவ்வொன்றும் ஏன் அவ்வவ்வாறு உள்ளன என கண்டறிந்துள்ளோம்.

இதுவொரு மிக நீண்டதொரு கட்டுரையாக இருக்கப்போகின்றது. சில வேளைகளில் அது சலிப்பூட்டக்கூடும், கடினமானதாக இருக்கக்கூடும், ஆனால் கட்டுரையின் முடிவில் உங்களுக்கொரு முழுமையான புரிதல் கிடைத்திருக்கும்.

முச்சக்கரவண்டிகள்தான் இச்சிக்கல்களுக்கெல்லாம் அடிப்படை, அரசு நினைத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் தொடருந்து சேவையினை சீராக்கி விட முடியும் போன்ற முட்டாள்தனமான அடிப்படையற்ற உரையாடல்கள்தான் இந்த ஆய்வுக்கட்டுரையினை எழுத எமக்கு தூண்டுகோலாய் விளங்கின.

வாசிப்பின் போது உங்களை மகிழ்விக்கவும், உங்களுக்கு எழும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உங்களுக்கு ஊக்கமூட்டவும் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். புதியதொரு பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள்.

II: வெளிப்படை உண்மைகள்

Untitled

அடிப்படையிலிருந்து தொடங்குவோம். முதலாவது, போக்குவரத்து உட்கட்டமைப்பு - சாலைகள், தண்டவாளங்கள், வீதிகள் ஆகியன வணிகங்கள், நாடுகள் ஏன் ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சிக்கே மிக மிக முக்கியமானவை.

பொருட்கள் மற்றும் மக்களை இடம்மாற்றும் இயலுமை நாகரீகத்தின் முக்கியமானதொரு அம்சமாக விளங்குகிறது. பண்டைய பேரரசுகள் சாலைகள் மற்றும் ஆறுகளுக்கு அண்மித்த போக்குவரத்து மையங்களிலேயே செழிப்புற்றிருந்தன. பண்டைய காலத்து பட்டுப்பாதை சீனாவினை இந்தியாவிற்கும் அங்கிருந்து மத்திய கிழக்கிற்கும் தொடர்புபடுத்தியது. இப்பாதையில்தான் குங்கிலியம் தொடங்கி இலக்கியங்கள் வரை அனைத்தும் இருபுறமும் சென்று சேர்ந்தன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட தொழிற்புரட்சியில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் அமைக்கப்பட்டிருந்த புத்தம்புதிய கால்வாய்கள் மிகப்பெரும் பங்கு வகித்திருந்தன. 19 ஆம் நூற்றாண்டில், தொடருந்து தண்டவாளங்கள், மேலும் சிக்கலான பொருளாதாரங்கள், அதிகப்படியான நகர்வு, மற்றும் அதிகப்படியான சமூக வாய்ப்புகளுக்கு வழிகோலி வளர்ச்சியை முன்னெடுத்து சென்றிருந்தன.

National Geographic இன் வரைபடம்: https://education.nationalgeographic.org/resource/silk-roads

National Geographic இன் வரைபடம்: https://education.nationalgeographic.org/resource/silk-roads